காந்திநகர் :பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. சட்டசபை தேர்தலில், முந்தைய சாதனைகள் பலவும் முறியடிக்கப்பட்டுள்ளன.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபையின் ௧௮௨ தொகுதிகளுக்கு கடந்த ௧ மற்றும் ௫ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ.,வுக்கு சாதகமாகவே இருந்தன.
![]()
|
முன்னிலை
இந்நிலையில், இத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. துவக்கம் முதலே, பா.ஜ., பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. பெரும்பான்மைக்கு ௯௨ தொகுதிகளில் வெற்றி தேவை என்ற நிலையில், ௧௫௬ தொகுதிகளில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ௨௦௧௭ல் நடந்த தேர்தலில், பா.ஜ., ௯௯ தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் ௭௭ல் வென்றது. தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ௧௭ தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.
பெரிய அளவில் போட்டியாக கருதப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை மற்றும் இதர கட்சிகள், நான்கு தொகுதிகளை பிடித்துள்ளன.
இந்தத் தேர்தலில், பா.ஜ., பல சாதனைகளை முறியடித்துள்ளது. தொடர்ந்து, ௨௭ ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பா.ஜ., ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து ஏழு முறை ஆட்சி அமைத்த சாதனையை இதன் வாயிலாக பா.ஜ., சமன் செய்துள்ளது.
இலக்கு
இந்தத் தேர்தலின்போது, பா.ஜ.,வின் முந்தைய சாதனையான ௧௨௮ இடங்களில் வென்றதை விட, அதிக இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த ௧௯௮௫ல் காங்கிரஸ், ௧௪௯ இடங்களில் வென்றதே சாதனையாக இருந்தது.
தற்போது தன் சொந்த சாதனையுடன், மாநில சட்டசபை தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையை பா.ஜ., படைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில், ௮௫ சதவீத தொகுதிகள் பா.ஜ., வசம் சென்றுள்ளன. மேலும் அதன் ஓட்டு சதவீதம் ௫௫ சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கே, குஜராத்தில் பா.ஜ., வெற்றிக்கு முக்கிய காரணமாகும். மண்ணின் மைந்தரான அவர், ௩௧ பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார். இதைத் தவிர இரண்டு பிரமாண்ட தேர்தல் பிரசார பேரணியிலும் பங்கேற்றார். ஆமதாபாதில், ௫௦ கி.மீ., துார பேரணி, நான்கு மணி நேரம் நடந்தது. இதில், ௧௦ லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடந்த ௨௦௧௭ தேர்தலில் பா.ஜ.,வுக்கு கடுமையான போட்டி கொடுத்து, ௭௭ தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் இந்த முறை அமைதியாக இருந்தது. தேர்தலுக்கு முன்பே தன் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொண்டதாக பரவலாக விமர்சிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து சோனியா குடும்பம் விலகியது. மேலும், பாரத ஒற்றுமை யாத்திரையில் முன்னாள் தலைவர் ராகுல் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவர் குஜராத்தில், இரண்டு கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டார். அவருடைய சகோதரியும், பொதுச் செயலருமான பிரியங்காவும் ஏதோ கடமைக்காக சில பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.
காங்கிரஸ் பெரிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடாதது தான், அக்கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.புதுடில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, இங்கு தீவிரமாக களமிறங்கியது. அக்கட்சியின் தலைவரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இருப்பினும் மோடியின் அலையில், அவருடைய பிரசாரம் பெரிய அளவில் எடுபடவில்லை.
பிரதமர் மோடியின் தீவிர பிரசாரம், கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் பிரசார வியூகங்கள் ஆகியவை பா.ஜ.,வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன. அதே நேரத்தில் பிரசார களத்தில் காங்கிரஸ் மவுனமாக இருந்ததும், படேல் சமூகத்தினர் ஆதரவு மீண்டும் கிடைத்ததும், பா.ஜ.,வின் வெற்றியை உறுதி செய்தன.
இந்தத் தேர்தல் வெற்றி குறித்து, பா.ஜ., தலைவர் நட்டா கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடியின் வளர்ச்சிக்கான உறுதிமொழி, சிறந்த நிர்வாகம், மக்கள் நலனில் உள்ள அக்கறை ஆகியவையே இந்த வெற்றிக்கு காரணமாகும். பிரதமர் மோடி தலைமையில், கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம் பெற்ற வளர்ச்சியை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.பிரதமர் மீதும், பா.ஜ., மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலேயே, இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், பூபேந்திர படேல் முதல்வராக தொடருவார் என்றும், ௧௨ம் தேதி அவர் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 33 ஆண்டுகள், 1977 - 2011, மார்க்சிஸ்ட் கம்யூ., ஆட்சியில் இருந்தது. இதுவே இந்தியாவில் தொடர்ந்து நீண்டகாலம் ஆட்சி செய்த கட்சியாக இருந்தது. குஜராத்தில், பா.ஜ., 1995 மார்ச் 14 முதல், 27 ஆண்டுகள், எட்டு மாதங்கள் ஆட்சியில் உள்ளது. தற்போது மீண்டும் வென்றுள்ள நிலையில், இக்கட்சி ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்யும் போது, மார்க்சிஸ்ட் கட்சியின் சாதனை முறியடிக்கப்படும்.
குஜராத் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தோல்வியை கண்டுள்ளது. அந்தக் கட்சி, ௧௭ இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.சட்டசபையின் மொத்த தொகுதிகளில், ௧௦ சதவீத இடங்களில் வெல்லும் கட்சியே, எதிர்க்கட்சி அந்தஸ்து கோர முடியும். தற்போது அந்த வாய்ப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது.லோக்சபாவிலும், காங்கிரஸ் ௨௦௧௪ மற்றும் ௨௦௧௯ தேர்தல்களில் படுதோல்வி அடைந்ததால், அதற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை.
பா.ஜ., குஜராத்தில் 1995லிருந்து தொடர்ந்து ஏழாவது முறையாக வென்றுள்ளது. இம்முறை, அதிகபட்சமாக இம்முறை 156 தொகுதியில் வென்று, தன் முந்தைய சாதனையான 2002ல் பெற்ற 127 இடங்களை முறியடித்தது. கடந்த 1985ல் காங்., 149 தொகுதிகளில் வென்றதே அதிகபட்சமாக சாதனையாக இருந்தது. இதையும் பா.ஜ., முறியடித்தது. கடந்த ஏழு சட்டசபை தேர்தலில்பா.ஜ., வென்ற இடங்கள்1995 121 1998 1172002 1272007 1172012 1152017 992022 156
தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில், 'இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா' கணிப்பு ஓரளவுக்கு சரியாக அமைந்தது. குஜராத்தில் பா.ஜ., 131 - 151, ஹிமாச்சலில் காங்., 30 - 40 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தது.
குஜராத்பூபேந்திர படேல், பா.ஜ., - குஜராத் முதல்வர்ரிவபா ஜடேஜா, பா.ஜ., - கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவிஹர்திக் படேல், பா.ஜ., - காங்.,கில் இருந்து பா.ஜ.,வில் இணைந்தவர்ஜிக்னேஷ் மேவானி, காங்., - கடந்த முறை சுயேச்சை எம்.எல்.ஏ., உருண்ட தலைகள்குஜராத்பாபுபாய் போக்ரியா, பா.ஜ., - இரு முறை எம்.எல்.ஏ., இசுதன் காத்வி -- ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்இன்ரானில் ராஜ்குரு, காங்., - முன்னாள் எம்.எல்.ஏ.,
உணர்ச்சி வசப்பட்டேன்.
தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
குஜராத்தில் மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளதால் மக்கள் வளர்ச்சிக்கான அரசியலுக்கு ஆசி வழங்கியுள்ளதுடன், புதிய உயரத்துக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:குஜராத்தில், ௨௫ ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தும் மிகப் பெரும் சாதனை வெற்றியை அளித்ததன் மூலம், பா.ஜ., மீதான அன்பை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஊழல் மற்றும் வாரிசு ஆட்சிகள் மீதான மக்களின் கோபம் வெளிப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிக விரைவாக அனைத்து பலன்களும் கிடைக்கவே மக்கள் ஓட்டளித்துள்ளனர்.
ஹிமாச்சலப் பிரதேச வாக்காளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். வெற்றி பெற்ற கட்சியை விட, ௧ சதவீதமே குறைவாக நம் ஓட்டு சதவீதம் உள்ளது. மக்களின் அன்புக்கு நான் தலைவணங்குகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.