சூளைமேடு, சூளைமேட்டில், உயர் மின்னழுத்த மின்மாற்றி அருகில், மாநகராட்சியின் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால், குப்பை தொட்டியை அகற்றி, மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தேனாம்பேட்டை மண்டலம், 109வது வார்டில், ராமானுஜம் தெரு உள்ளது. இந்த தெருவில் சேகரமாகும் குப்பையை சேகரிக்க, சென்னை மாநகராட்சி சார்பில் மூன்று குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
உயர் மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றி அருகில் இந்த குப்பை தொட்டிகள் இருப்பதால், மின்மாற்றியில் இருந்து தீப்பொறி பறந்தால், கிழே உள்ள குப்பை தொட்டியில் தீப்பற்றி, எந்த நேரமும் தீ விபத்து ஏற்படும். இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குப்பை தொட்டிகள் அருகிலுள்ள உயர் மின்னழுத்தம் கொண்ட மின் மாற்றியில், அடிக்கடி மின் கசிவு ஏற்படும். இதன் கீழ்ப் பகுதியில் குப்பை தொட்டிகள் இருப்பதால், தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அதேபோல், குப்பை தொட்டியில் சேகரமாகும் குப்பையை, மாநகராட்சியினர் தினமும் அகற்றுவது இல்லை.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அகற்றுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதுமட்டுமின்றி, ராமானுஜம் தெருவை சூளைமேடு பிரதான சாலையுடன் இணைக்கும் பகுதியில், இந்த குப்பை தொட்டிகள் இருப்பதால், குப்பை அகற்ற வாகனம் வரும் போது, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த தெருவிற்கு வேறு பக்கம் வழியில்லாததால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே, அதிகாரிகள் இதை கண்காணித்து, குப்பை தொட்டியை அகற்றி, மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.