வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்துள்ளது. இது, சென்னை - மாமல்லபுரம் இடையே, இன்று (டிச.9) நள்ளிரவுக்கு பின் கரையை கடக்கிறது. இதனால், 15 மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் இதனையொட்டிய மாவட்டங்களில் காற்று அதிகம் வீசும், மழையும் அதிகம் பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. இன்று காலை 11 மணியளவில் தீவிர புயல் வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்படலாம்.
வங்கக் கடலில் சுழலும் மாண்டஸ் புயல், நேற்று மாலை நிலவரப்படி, தீவிர புயலாக வலுப்பெற்றது. இது, சென்னைக்கு அருகே 2,60 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.
தீவிரம் குறையும்
இந்த தீவிர புயல், தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை நோக்கி, மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நிலப்பகுதியை நெருங்கும்போது, இன்று காலையில் அதன் தீவிரம் குறையும். அதன்பின் மேலும் படிப்படியாக நகர்ந்து, தமிழகம் - புதுச்சேரி நிலப் பகுதிக்குள் நுழைகிறது.
புயலின் மையப் பகுதி, இன்று நள்ளிரவுக்கு பின், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடைப்பட்ட கடலோர பகுதியில், மாமல்லபுரம் - சென்னை இடையே கரையை கடந்து, நிலத்திற்குள் நுழையும் என எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை நெருங்கும்போதும், கரைக்குள் நுழையும்போதும், மணிக்கு, 85 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ளது.

அலைகள் கொந்தளிக்கும்
சூறாவளி காற்றால், தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பழைய கட்டடங்கள், குடிசைகள் சேதமாகும்; மரங்கள் முறியும்; மின் கோபுரங்கள், மின் கம்பங்கள் மற்றும் கேபிள்கள் சேதமடையலாம். முன்னெச்சரிக்கையுடன் இருக்க, அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடல் அலைகள் சீற்றத்துடன் கொந்தளிப்பாக காணப்படும். நிலப் பகுதிக்குள் சூறாவளி காற்றுடன், புயல் நுழையும்போது, கடல் அலைகள் இயல்பை விட, 3 அடிகளுக்கு மேல் எழும்பும். இதனால், கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளுக்குள் கடல் நீர் புகும் வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவை ஒட்டிய கடல் பகுதிகளுக்கு, நாளை வரை மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
15 மாவட்டங்கள் 'அலெர்ட்'
கரையை கடந்து நிலத்திற்குள் வரும் புயல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சூழ்ந்தவாறு, வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாகச் சென்று, வலுவிழந்த நிலையில் ஆந்திர எல்லைக்குள் நுழையும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா என, 15 மாவட்டங்கள், எச்சரிக்கை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
புயல் சுழன்று வரும் வங்கக் கடலின் மேற்கு, தென் மேற்கு பகுதிகள், இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளால், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. புயலின் வேகம், நகர்வு, கடல் அலைகளின் தன்மை, காற்றின் சுழற்சி, திசை, அதன் வேகம் ஆகியவை குறித்து, ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது.இதற்கு, 'இன்சாட்' செயற்கைக்கோள் மற்றும் தமிழக பகுதிகளை சுற்றி வைக்கப்பட்டுள்ள நான்கு 'ரேடார்'களின் தரவுகள், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திரா, தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை ஆய்வு மையங்களும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும், ரயில்வே மற்றும் விமான நிலைய வானிலை கண்காணிப்பு குழுவினரும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்து, புயலின் பாதையை கண்காணித்து வருகின்றனர்.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீன்பிடி படகுகள் கரைக்கு திரும்ப, கடலோர காவல் படை அறிவுறுத்தி உள்ளது. நடுக்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களை, உடனடியாக கரைக்கு திரும்புமாறு, கடலோர காவல் படையினர், ஹெலிகாப்டர்களில் சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.மேலும், கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அனைத்து துறைமுகங்களிலும் படகுகளை சரியாக கட்டி வைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடவும், கடலோர காவல் படை தயாராக உள்ளது.
சென்னை உட்பட 24 மாவட்டங்களில், இன்று பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலுார், திருப்பத்துார், திருவாரூர், பெரம்பலுார், தஞ்சாவூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல் உட்பட, 24 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் கரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வேக காற்று, அதிக மழை
கடந்த காலத்தில் புயல் வீசியபோது 1966, 1994, 2016 ஆண்டுகளில் சென்னையில் அதிக காற்று வீசியது. 2016 ல் வர்தா புயலின் போது சென்னையில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் போது சென்னையில் காற்று, மழையின் தீவிரம் அதிகம் இருக்கும்.
ஊரக திறனாய்வு தேர்வு: தள்ளி வைப்பு
கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு, 'மாண்டஸ்' புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, கல்வி உதவித் தொகை வழங்க, ஊரக :திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு, நாளை மாநிலம் முழுதும் நடப்பதாக இருந்தது.
மாண்டஸ் புயல் காரணமாக, ஊரக திறனாய்வு தேர்வு, வரும், 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக, அரசு தேர்வுத்துறைஇயக்குனர் சேதுராம வர்மா அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் இன்று நடக்க இருந்த, எழுத்து மற்றும் செயல்முறை தேர்வுகள் தற்போதைக்கு தள்ளி வைக்கப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கான தேதி பின் அறிவிக்கப்படும் என, பல்கலை அறிவித்துள்ளது.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இன்று நடக்க உள்ள தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள், வரும் 16ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
கல்வி அதிகாரிகள் கூட்டம்
முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம், சென்னையில் இன்றும், நாளையும் நடக்கவிருந்தது.
இந்நிலையில், 'மாண்டஸ்' புயல், சென்னை அருகே இன்று கரையை கடக்கும் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், வரும் 12, 13ம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் அறிவித்து உள்ளார்.
மருத்துவமனைகளில் 'ஜெனரேட்டர், ஆக்சிஜன்'
அரசு மருத்துவமனைகளில், 'ஜெனரேட்டர்' மற்றும் ஆக்சிஜன் வசதிகளை தயார் நிலையில் வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம் அருகே 'மாண்டஸ்' புயல் கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதனால், மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜெனரேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை தயார் நிலையில் வைக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
உதவி எண்கள்
மாண்டஸ் புயலின் போது சென்னை மக்களின் அவசர தேவைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1913,044-2561 9206, 044-2561 9207, 044 2561 9208, 9445477205 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது