வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக கவர்னர் தொடர்பான விவகாரம், கர்நாடகா-, மஹாராஷ்டிரா எல்லை விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
![]()
|
இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, லோக்சபாவிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்பு செய்தனர்.
குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று, இரு சபைகளும் காலை 11:00 மணிக்கு கூடின. லோக்சபாவில், கேள்வி நேரத்தை ஆரம்பிக்க சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும் எழுந்து, தாங்கள் அளித்திருந்த ஒத்திவைப்பு தீர்மான, 'நோட்டீஸ்' குறித்து கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர், தமிழக கவர்னர் ரவி குறித்து தந்த ஒத்திவைப்பு தீர்மான 'நோட்டீஸ்' பற்றி கேள்வி எழுப்பினார்.
இதில், 'நீட் தேர்வு விலக்கு, ஆன்லைன் ரம்மிக்கு தடை உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் தராமலும், ஜனாதிபதிக்கு அனுப்பாமலும் கிடப்பில் வைத்துள்ளார். இது, தமிழக அரசின் நிர்வாகத்தை பாதித்துள்ளது.
'எனவே, கவர்னர் பதவி குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல, மஹாராஷ் டிரா - -கர்நாடகா எல்லை பிரச்னை குறித்து, தேசிய வாத காங்., மற்றும் சிவசேனா எம்.பி.,க்கள், கடுமையாக குரல் எழுப்பினர்.
அப்போது ஓம் பிர்லா பேசியதாவது:
சபையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என, சில எம்.பி.,க்கள் 'டுவிட்டரில்' பதிவிடுகின்றனர். இது, சரியான நடைமுறை அல்ல. லோக்சபா அலுவல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை, எம்.பி.,க்கள் தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜீரோ நேரம் துவங்கியபோது, காங்., மூத்த எம்.பி., ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சீன எல்லை விவகாரம் குறித்து பேச முயன்றார்; அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
![]()
|
இதையடுத்து, எந்த பிரச்னை குறித்தும், சபையில் பேச அனுமதிக்கப்படுவதில்லை எனக் கூறி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில், காங்., தேசியவாத காங்., கட்சிகளின் எம்.பி.,க்கள், 'சத்ரபதி சிவாஜி குறித்து, மஹாராஷ்டிரா கவர்னர் பேசிய கருத்துகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்' என குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
- நமது டில்லி நிருபர் -