வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'பொதிகை' எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி சென்றபோது, இரு அமைச்சர்களின் இலாகா மாற்றம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
![]()
|
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் 14ம் தேதி, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. பதவி ஏற்பு விழா நடத்த அனுமதி கேட்டு, கவர்னருக்கு கடிதம் அனுப்ப உள்ளனர்.
புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவுடன், இரண்டு அமைச்சர்களின் இலாகா மாற்றம் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
தென்காசி மாவட்டத் திற்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்குவதற்காக, நேற்று முன்தினம் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் பயணித்தார். அவருடன், அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் பயணித்தனர்.
தென் மண்டல கட்சி பொறுப்பாளராகவும், துணை பொதுச் செயலராகவும் அமைச்சர் பெரியசாமி உள்ளார். அதேபோல், தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால், பொறுப்பு அமைச்சராக ராமச்சந்திரன் உள்ளார்.
தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 'பவர்புல்' இலாகா கிடைக்கும் என பெரியசாமி எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு கூட்டுறவுத் துறை வழங்கப்பட்டது. இதனால், அவர் அதிருப்தியாக இருந்தார். சமீபத்தில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், முதல்வருடன் பெரியசாமியும் பயணித்தார். அப்போது, கூட்டுறவுத் துறையை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும், வருவாய் துறையை பெரியசாமிக்கும் மாற்றிக் கொடுப்பது குறித்து முதல்வர் ஆலோசித்துள்ளார்.
![]()
|
பின், இது தொடர்பான முடிவையும் இருவரிடமும் முதல்வர் தெரிவித்து உள்ளார். அவரது முடிவை, இரண்டு அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். எனவே, உதயநிதியின் அமைச்சர் பதவி ஏற்பு விழாவுடன், இரண்டு அமைச்சர்களின் இலாகா மாற்றமும் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement