சென்னை-திருவள்ளூரில் உள்ள வடசென்னை மின் நிலையத்தில், நேற்று முன்தினம், 615 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு 'வட சென்னை' என்ற பெயரில் அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
முதல் அலகில், 1994 அக்., 25; இரண்டாவது அலகில், 1995 மார்ச், 27; மூன்றாவது அலகில்,1996 பிப்., 24ல் மின் உற்பத்தி துவங்கின. இவற்றில்உற்பத்தியாகும் மின்சாரம், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
வட சென்னை மின் நிலையத்தின் மூன்று அலகுகளிலும் ஆரம்ப காலத்தில் முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின், பழுது உள்ளிட்ட காரணங்களால், 70 - 80 சதவீத அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டது.
இறுதியாக 2020 ஜூலை, 22ல் வட சென்னை மின் நிலையத்தில், 610 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டது.
பின், பழுது, 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணங்களால், மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனால், முழு அளவு மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
பழுது ஏற்படுவதை தவிர்க்க, வட சென்னை மின் நிலையத்தின் மூன்று அலகுகளிலும், முழுவீச்சில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, அந்த மின் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிக அளவாக, 615 மெகா வாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்து, சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இரண்டு அலகுகளில், 210 மெகா வாட் என, முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.