திருப்பூர்:திருப்பூர் அருகே பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீருக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி, மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி, பல்ல கவுண்டம்பாளையம், சரவணா நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இப்பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், மாணவர்கள் வகுப்பு களுக்கு செல்ல சிரமப்பட்டனர். மழை நீர் மூலமாக கொசு அதிகமாக உற்பத்தியாகி வருகிறது.
இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி தலைமையாசிரியர், வருவாய்த்துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, 200 மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆகியோர் பல்லகவுண்டம் பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்குளி போலீசார் பேச்சு நடத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
பின், ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல் பேச்சு நடத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஒரு மணி நேரமாக நீடித்த மறியல் கைவிடப்பட்டது. அப்பள்ளியில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும், அங்கு மண்ணை கொட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதால், மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.