பல்லடம்:பல்லடம் தாலுகா அலுவலகத்தில், கேபிள் ஆபரேட்டர்களுடனான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம், தாசில்தார் நந்தகோபால் தலைமையில் நடந்தது.
''கடந்த 2017 முதல் அரசு வழங்கிய 'செட்டாப் பாக்ஸ்'க்கு சிக்னல் கிடையாது. இதன் காரணமாக, 2017 முதல் அரசு செட்டாப் பாக்ஸ்களை தவிர்த்து, தனியார் சிக்னலை பயன்படுத்தி வருகிறோம். இதற்கிடையே, 2017 முதல் இன்று வரை, 'செட்டாப் பாக்ஸ்'க்கு உண்டான பணத்தை வட்டியுடன் கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் பணத்தை கட்டாவிட்டால் வழக்கு பதியப்படும் என காவல்துறை மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறது. அரசு இலவசமாக வழங்கிய 'செட்டாப் பாக்ஸ்'களை பொதுமக்களிடம் திருப்பி வாங்க முடியாத நிலை உள்ளது. கிடைக்காத சிக்னலுக்கு வட்டியுடன் பணத்தைக் கட்டுமாறு கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. கேபிள் ஆபரேட்டர்களின் குரல்வளையை நெருக்குகிறது தமிழக அரசு. இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்தாவிட்டால் சட்ட ரீதியாக சந்திப்போம்'' என்றனர்.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி தாலுகா கேபிள் ஆபரேட்டர்கள் பங்கேற்றனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததை தொடர்ந்து, ஆபரேட்டர்கள் வெளிநடப்பு செய்தனர்.