கோவை:கோவை மத்திய சிறையில் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக உயர் பாதுகாப்பு அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் விசாரணை நடக்கிறது.
கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு செல்களில் கண்காணிப்பும் அதிகம். அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் மொபைல் போன் பயன்படுத்துவது சிறை அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து அங்கு திடீர் சோதனை நடத்திய சிறை அதிகாரிகள் குழுவினர் கைதிகளின் செல்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
சிறைக்குள் மொபைல் போன் கொண்டு செல்லப்பட்டது எப்படி அதை பயன்படுத்தியவர்கள் யார் காவலர்கள் உதவி செய்தனரா என போலீஸ் மற்றும் சிறைத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவும் உயர் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தப்பட்டது.