சென்னை:மதுரை மாவட்டம் தோப்பூர் - உச்சப்பட்டி துணை நகரம், அதை ஒட்டிய பகுதிகளின் மேம்பாட்டுக்காக புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பல்வேறு நகரங்களின் புறநகர் பகுதிகளில் புதிய துணை நகரங்களை ஏற்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. இந்த வகையில், மதுரை மாவட்டம் தோப்பூர் - உச்சப்பட்டியில் புதிய துணை நகரம் ஏற்படுத்த வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.
மதுரையில் திருமங்கலம் செல்லும் வழியில் 586 ஏக்கர் நிலம் புதிய துணை நகரத்துக்காக தேர்வு செய்யப்பட்டது.இங்கு 289 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9557 மனைகள் உருவாக்கப்படுகின்றன.
இதில் படிப்படியாக மனைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இந்நிலையில் இந்த துணை நகரத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் இதை ஒட்டிய பிற பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு இல்லாதததால் அங்கு நகர்ப்புற வளர்ச்சி சீரற்ற நிலைக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.
எனவே தோப்பூர் - உச்சப்பட்டி அதை ஒட்டிய பகுதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த புதிய நகர்ப்பற வளர்ச்சி திட்டம் தயாரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான பூர்வாங்க ஆய்வுகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய நகர்ப்புற வளர்ச்சி திட்ட தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.