சென்னை:விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் நிலையில், பெரு நிறுவனங்கள் விவசாய மின் இணைப்புபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், அரசுக்கு ஏற்படும் இழப்பை தடுக்க,2017 - 18 முதல்வழங்கப்பட்ட விவசாய மின்இணைப்புகள் தொடர்பாக,தீவிர ஆய்வு நடத்தப்படுமாஎன்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு சாதாரணம், சுயநிதி ஆகிய பிரிவுகளின் கீழ் இணைப்பு வழங்குகிறது. இரு பிரிவுகளிலும், மின் வினியோகம் முழுதும் இலவசம். சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவும் இலவசம். சுயநிதி பிரிவில் மின் வழித்தடசெலவை மட்டும், விவசாயிகள் ஏற்க வேண்டும்.
தற்போது, 23 லட்சம்விவசாய மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு கேட்டு, மூன்று லட்சம் பேர் காத்திருக்கின்றனர். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு 5,500 கோடி ரூபாய் செலவாகிறது. இதைதமிழக அரசு, மானியமாக வழங்குகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் வேளாண்உற்பத்தியை அதிகரிக்கவும்,விவசாயிகளின் செலவை குறைக்கவுமே, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. சிலர் தங்களின் பெயரில் உள்ள மின் இணைப்பை,பெரிய நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர்.
பன்னாட்டு மற்றும் பெருநிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வாங்கியுள்ளன. அவை, விவசாயிகளின் பெயர்களில் உள்ள விவசாய மின் இணைப்புகளை, தொண்டு நிறுவனங்களின் பெயர்களில் மாற்றி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
விவசாய மின்சாரத்தை பயன்படுத்தி, பழங்கள், பண பயிர்களை சாகுபடி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே, சுயநிதி பிரிவில், 'தத்கல்' எனப்படும் விரைவு மின் திட்டம் அறிமுகம் செய்த, 2017 - 2018ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட மின் இணைப்புகள் தொடர்பாக, தனி குழு அமைத்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இதனால், முறைகேடுகளை கண்டறிந்து தடுக்க முடியும். அரசுக்கு பல கோடி ரூபாய் செலவுமிச்சமாகும். இவ்வாறு அவர் கூறினார்.