சென்னை:கோவை கார் குண்டுவெடிப்பில் பலியான ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபின் கூட்டாளிகள் மூவரை டிச., 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக்.23ல் அதே பகுதியை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபின் 29 கார் குண்டு வெடிப்பு நடத்தி பலியானார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஜமேஷா முபின் மொபைல் போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் குன்னுாரை சேர்ந்த உமர் பரூக் 39; போத்தனுாரை சேர்ந்த முகமது தவ்பீக் 25; தெற்கு உக்கடத்தை சேர்ந்த பெரோஸ்கான் 28 ஆகியோர் அடிக்கடி ஜமேஷா முபினுடன் பேசியது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஜமேஷா முபினுடன் சேர்ந்து ஹிந்து கோயில்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டனர்.
இவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் தயாரிப்பது பற்றிய குறிப்புகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதன் பின் மூவரையும் கைது செய்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை பூந்தமல்லியில் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் மூவரையும் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை டிச., 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.