சென்னை:'இலங்கை விவகாரத்தில் வகுப்புவாத அணுகுமுறையை கடைபிடிக்கவில்லை' என ராஜ்யசபாவில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்து உள்ளார்.
அதன் விபரம்:
* வைகோ: ஜெனீவாவில் நடந்த ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இலங்கை தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தபோது என்ன காரணங்களுக்காக இந்தியா ஓட்டு அளிக்கவில்லை இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது முந்தைய அரசு ஆயுதங்களை வழங்கியது; அது வேறு.
ஆனால் மத்திய அரசு இப்போது இலங்கைக்கு ஆதரவளிக்கிறது. சமீபத்தில் சீனப் போர்க் கப்பல் அந்நாட்டு துறைமுகத்தில் தரையிறங்கி இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முக்கியமான பிரச்னையில் இந்தியாவின் நலனை காக்க வெளியுறவுத் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
* அமைச்சர் ஜெய்சங்கர்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் நாம் ஓட்டு அளிக்கவில்லை. இது இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாடு.
இந்த அரசு மட்டுமல்ல இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் குறைகளை தீர்ப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் இது மிகவும் ஆக்கப்பூர்வமான வழி என இதற்கு முந்தைய அரசும் நினைத்தது. அதுவே எங்களின் அணுகுமுறையாக தொடர்கிறது.
தமிழர் சிங்களர் மற்றும் பிற சமூகங்களை உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் மத்திய அரசு ஆதரவு வழங்கி உள்ளது.
எனவே இதுபோன்ற கடுமையான பொருளாதார சூழ்நிலையில் அண்டை நாட்டுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் வகுப்புவாத அணுகுமுறையை எடுக்கவில்லை. அதே நேரத்தில் நாம் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்றால் நாம் நம் பொறுப்புகளிலிருந்து விலகி விட்டது போலாகி விடும்.
இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.