வால்பாறை;வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணியர் உணவு வழங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் வரையாடு, குரங்குகள், சிங்கவால்குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், புதுத்தோட்டம் பகுதியில், சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் ரோட்டில் துள்ளி விளையாடுகின்றன. ரோட்டில் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணியர் சிலர் உணவு வழங்குகின்றனர்.
அவைகள் உணவை எதிர்நோக்கி சாலையோரம் விளையாடும் போது, அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கி பலியாகின்றன.
வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் சிலர், உணவு பொட்டலங்களை பிளாஸ்டிக் கவருடன் சாலையோரம் வீசி செல்வதால், இதை உட்கொள்ளும் குரங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிங்கவால் குரங்குகளுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதியில் கிடைக்கிறது.
மனிதர்கள் உண்ணும் மாறுபட்ட உணவை வழங்குவதால், அவை வீடு மற்றும் கடைகளுக்கு செல்கின்றன.
சிங்கவால் குரங்குகளுக்கு மக்கள் உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சுற்றுலா பயணியர் இயற்கைக்கு மாறான உணவுகளை அவற்றுக்கு வழங்கக்கூடாது.
மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.