வால்பாறை;வால்பாறை, முடீஸ் ரோடு புதுப்பிக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, முடீஸ் தோணிமுடி, பன்னிமேடு வரையான, 20 கி.மீ., துாரமுள்ள ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, வால்பாறை நகராட்சி சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முடீஸ் - பன்னிமேடு வரை ரோடு சீரமைக்க டெண்டர் விடப்பட்டு பணி நடக்கிறது.
ரோடு புதுப்பிக்கும் பணிக்கு, ரோடு முழுவதும் ஜல்லிக்கற்கள் பரப்பியுள்ளனர்.
பணியானது ஆமை வேகத்தில் நடப்பதால், வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. இதனால், சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
அதனால், ரோடு புதுப்பிக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பன்னிமேடு, தோணிமுடி, முடீஸ் பஜார் வழியாக ரோடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பத்து நாட்களுக்குள் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.