சென்னை:கோயில்களில் பின்பற்றும் ஆகமங்கள் தொடர்பாக 50 கேள்விகள் உடன் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமன விதிகளை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அந்தந்த ஆகமத்தின்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் எந்தெந்த கோயில்களில் எந்தெந்த ஆகமம் பின்பற்றப்படுகிறது என்பதை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஐவர் குழுவை நியமித்தது. ஐவர் குழுவில் இருவரை அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஆலய வழிபாட்டு சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்கள் ஆகியும் குழுவுக்கு இரு உறுப்பினர்களை இன்னும் நியமிக்கவில்லை.
அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் சத்தியவேல் முருகனை இந்தக் குழுவில் உறுப்பினராக நியமிக்கக் கூடும். சத்தியவேல் முருகன் தயார் செய்துள்ள 50 கேள்விகள் அடங்கிய பட்டியலை இணைத்து அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கையாக அனைத்து கோயில்களுக்கும் அனுப்பி உள்ளார். இந்த கேள்விகளுக்கான விபரங்களை பெற்று திருப்பி அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது.
ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை கண்டறியும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் உயர் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. அப்படி இருக்கும்போது அந்தப் பணியை சத்தியவேல் முருகன் எப்படி அபகரிக்க முடியும். கேள்வி பட்டியல் மற்றும் சுற்றறிக்கை சட்டவிரோதமானது.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இந்த சுற்றறிக்கை உள்ளது. ஆகமம் பற்றி கூறவும் கேள்விப் பட்டியலை தயாரிக்கவும் சத்தியவேல் முருகனுக்கு தகுதி இல்லை. குழுவில் உறுப்பினராக அவரை நியமிக்கவும் தகுதி இல்லை.
சமஸ்கிருதம் குறித்து சத்தியவேல் முருகனுக்கு தெரியாது. சமஸ்கிருதத்தில் தான் ஆகமம் இருக்கும்.
ஆகமத்தையும் ஹிந்து பாரம்பரியத்தையும் நீர்த்து போகும் விதமாக விஷமத்தனமாக கேள்விகளை சத்தியவேல் முருகன் கேட்டுள்ளார்.
எனவே சத்தியவேல் முருகன் தயாரித்த கேள்வி பட்டியலையும் அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை தடை விதிக்க வேண்டும். ஐவர் குழுவில் சத்தியவேல் முருகனை நியமிக்கவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
கேள்விகள் பட்டியலுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.