அரைகுறையாக கால்வாய்
பொள்ளாச்சி, போலீஸ் குடியிருப்பு ரோட்டில், கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள், பாதியிலேயே நிற்கின்றன. இதனால், போலீஸ் குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, வெளியேறும் கழிவுநீர் ரோட்டோரமாகவே தேங்கி கிடக்கிறது. பணியை நிறைவு செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
- -நவீன், பொள்ளாச்சி.
ரோடு சேதம்
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி, விவேகானந்தா காலனி பிரதான சாலை, பேரூராட்சி அலுவலம் செல்லும், முக்கிய ரோடாக உள்ளது. வால்பாறை ரோட்டில், திரும்பும் இடத்தில் இருந்து, ரோடு முழுதும் ஆங்காங்கே சேதமடைந்து, பள்ளம் நிறைந்து காணப்படுகிறது. ரோட்டை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
- நாகஜோதி, சூளேஸ்வரன்பட்டி.
கிடப்பில் பாலம் பணி
வால்பாறை நகரில் இருந்து, சிறுகுன்றா செல்லும் ரோட்டில், நெடுஞ்சாலை துறை சார்பில், நடக்கும் பாலம் சீரமைக்கும் பணி, பாதியில் நின்றுள்ளது. சுற்றுலா பயணியர் அதிகம் வந்து செல்லும், இந்த ரோட்டில் பாலம் பணியால், வாகன ஓட்டிகள், விபத்துக்கு உள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் பணியை நிறைவு செய்ய வேண்டும்.
- -வாசுகி, வால்பாறை.
மார்க்கெட் ரோடு 'பஞ்சர்'
பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில், வாரச்சந்தை ரோடு சந்திக்கும் இடம், உருக்குலைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அப்பகுதி எப்போதுமே சேதமடைந்து இருப்பதால், நிரந்தர தீர்வு காண வேண்டும்.
-- முருகன், பொள்ளாச்சி.
நிழற்கூரை சேதம்
வால்பாறை நகரில் இருந்து, முடீஸ் கெஜமுடி எஸ்டேட் பகுதியில், பயணியர் வசதிக்காக, நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூரை, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பயணியர் பயன்படுத்த அச்சப்படுகின்றனர். நிழற்கூரையை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம், முன் வர வேண்டும்.
- -கணேசன், கெஜமுடி எஸ்டேட்.
ஜல்லிகற்களால் சிக்கல்
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவில் உள்ள மேம்பாலத்தில், 'பேட்ச் ஒர்க்' செய்வதற்காக, சில நாட்களுக்கு முன், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. பணிகள் முடிந்ததும், அவை, அகற்றப்படாததால் ரோடு முழுவதும், சிதறிக்கிடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
- ரமேஷ், பொள்ளாச்சி.
தனியார் பஸ்கள் அடாவடி
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும், தனியார் பஸ்களின் ஓட்டுனர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில், மிக வேகமாக பஸ்களை இயக்குகின்றனர். இதனால், மற்ற வாகன ஓட்டிகள், உயிரை பணயம் வைத்தே செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் கவனித்து, இதற்கு, தீர்வு காண வேண்டும்.
- ராமநாதன், பொள்ளாச்சி.
உருக்குலைந்த ரோடு
பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளியில் இருந்து, பேரூராட்சி அலுவலகம் செல்லும் ரோடும், அங்கிருந்து, நல்லுார் செல்லும் கிருஷ்ணா குளம் ரோடும் உருக்குலைந்து உள்ளது. இந்த ரோட்டிலுள்ள பள்ளங்களில், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். ரோட்டில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.
-- கேசவன், பொள்ளாச்சி.
பாதாள சாக்கடை குழியால் அச்சம்
பொள்ளாச்சி, சப் - கோர்ட்டுக்கு எதிரில் உள்ள, ராஜாமில் ரோட்டில், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகள் அனைத்தும் உருக்குலைந்துள்ளது. பல இடங்களில் ரோடும் சேதமடைந்து பள்ளமாக உள்ளது. பாதாள சாக்கடை குழியை சீரமைத்து ரோட்டையும் புதுப்பிக்க வேண்டும்.
- நந்தினி, ராஜாமில் ரோடு.