சென்னை: குஜராத் சட்டசபை தேர்தல் வெற்றியை அடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் முன், அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடந்தது.
இதற்காக, மாநிலம் முழுதும் இருந்து நிர்வாகிகள், கமலாலயம் வந்தனர். குஜராத் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, காலை துவங்கியதில் இருந்து, பா.ஜ., பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
அக்கட்சி, இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகுதிகளை கைப்பற்றி, குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து நேற்று, கமலாலயம் முன் குவித்த பா.ஜ., தொண்டர்கள், பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.