வால்பாறை:மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் சரியத்துவங்கியுள்ளது.
வால்பாறையில், ஆண்டு தோறும் பெய்யும் பருவமழையை கருத்தில் கொண்டு, காடம்பாறை அணையில் சுழற்சி முறையில் தினமும், 400 மெகாவாட் மின் உற்பத்தியும், சோலையாறு அணையில், 109 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால், பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படாது என, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அணைகள் நிரம்பியதையடுத்து, காடம்பாறை, சோலையாறு அணைகளில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், பரம்பிக்குளம் அணையின் ஷட்டர் அக்., மாதம் உடைந்ததால், சோலையாறு அணையில் மின் உற்பத்தி செய்யப்படுவது, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டது. பரம்பிக்குளத்தில் இருந்து, 5.8 டி.எம்.சி., தண்ணீர் வீணானது.
பரம்பிக்குளம் அணையில், ஷட்டர் சீரமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், கடந்த ஒரு வாரமாக சோலையாறு அணையில் இருந்து, மானாம்பள்ளி மின்உற்பத்தி நிலையம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
வால்பாறையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையாத நிலையில், மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 149.79 அடியாக இருந்தது. வடகிழக்கு பருமழை தீவிரமடைந்தால் மட்டுமே சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளில் நீர்மட்டம் உயரும்.