- நமது நிருபர் -
'அரசு சார்பில், கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரையை, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். விலையை குறைக்கும் முயற்சியாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. அதை நம்பி விவசாயிகள் ஏமாற வேண்டாம்,' என, தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர்அறிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குஇருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் தேங்காய், இளநீர் விற்பனைசெய்யப்படுகிறது.
இந்நிலையில், எந்தாண்டும் இல்லாத அளவுக்கு, கொப்பரை, தேங்காய் விலை சரிந்ததால் விவசாயமே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தற்போது சீசன் நிறைவடைந்துள்ளது.
சீசன் இல்லாத சூழலில், வரத்து குறைவால் விலை உயர வாய்ப்புள்ளது. ஆனால், இடைத்தரகர்கள், நிறுவனங்கள், 'சிண்டிகேட்' அமைத்து, விலையை குறைத்து, விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய முனைப்பு காட்டுகின்றனர்.
இதுபோன்ற பிரச்னையால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய், கொப்பரை விலை, காங்கேயம் மார்க்கெட்டில் சரிந்துள்ளது.
கடந்த வாரம், 1,940 ரூபாய்க்கு விற்ற ஒரு டின் (15 கிலோ) எண்ணெய் நேற்று, 1,850 ரூபாயாகவும்; சாதாரண கொப்பரை ஒரு கிலோ, 87ல் இருந்து, 84 ரூபாயாகவும்; ஸ்பெஷல் கொப்பரை, ஒரு கிலோ, 91ல் இருந்தது, 88 ரூபாயாகவும் சரிந்துள்ளது.
பச்சை தேங்காய் ஒரு டன், 27 ஆயிரத்தில் இருந்து, 26 ஆயிரம் ரூபாயாகவும்; கருப்பு தேங்காய், 30 ஆயிரத்தில் இருந்து, 29 ஆயிரமாகவும் குறைந்துள்ளது. விலை சரிந்துள்ளதாக வீண் குழப்பம் ஏற்படுத்தி, விலையை குறைப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஒரு நிறுவனத்தின் பெயரில், உலா வரும், எஸ்.எம்.எஸ்.,ல், 'தேங்காய் பருப்பு மார்க்கெட்டில் கொள்முதல் பின்வாங்கல். 'நேபட்' நிறுவனம், தமிழகத்தில் கொள்முதல் செய்த, 4,500 லோடு தேங்காய் பருப்பை, வெளி மார்க்கெட்டில் விற்க தயார்?, என, பரவலாக பேச்சு. முக்கிய கம்பெனி, பெரிய கொள்முதலாளர்கள், அந்த தேங்காய் பருப்பை கொள்முதல் செய்ய காத்திருக்கின்றனர்,' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு கொள்முதல் செய்த கொப்பரையை, விற்பனை செய்ய டெண்டர் வெளியிட்டதாக எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து, அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகாத நிலையில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எஸ்.எம்.எஸ்., பரப்பப்படுகிறது, என, புகார் எழுந்துள்ளது.
எல்லாமே வதந்தி!
தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
விவசாயிகளிடம் தவறான தகவல்களை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி குறைந்த விலைக்கு தேங்காய், கொப்பரை கொள்முதல் செய்ய, கார்ப்பரேட் நிறுவனங்களுடன், எஸ்.எம்.எஸ்.,ல் வதந்தி பரப்பும் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
அரசு கொள்முதல் செய்த கொப்பரையை, விற்பனை செய்ய உள்ளதாக தகவல்களை பரப்பி உள்ளது, மார்க்கெட் நிலவரம் அனுப்பும் எஸ்.எம்.எஸ்., நிறுவனம். இது உண்மையா என தெரியாமல் குழப்பம் ஏற்படுகிறது.
ஈரோட்டை சேர்ந்த மார்க்கெட் நிலவரம் அனுப்பும் எஸ்.எம்.எஸ்., நிறுவனம், தவறான தகவல்களை பரப்பி கொப்பரை கொள்முதல் விலையை குறைக்க முயற்சிக்கிறது.
சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், கேரளாவில் வரும் பிப்., மாதம் தான் சீசன் துவங்குகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு கொப்பரை விலை குறைய வாய்ப்பில்லை.
விலை உயரும்!
மேலும், கேரளாவில் கடந்த பத்து ஆண்டுகளாக வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற பிரச்னையால், வரத்து குறைந்துள்ளது. சீசன் துவங்கினாலும் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
தமிழகத்தில் ஏப்., மாதம் தான் சீசன் துவங்கும். எனவே, வீண் குழப்பமடைய வேண்டாம்; தவறான தகவல்களை நம்பினாலும் ஏமாற வேண்டாம். ஜன., மாதம் கொப்பரை விலை உயர வாய்ப்புகள் உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.