வால்பாறை:வால்பாறை அடுத்துள்ள, மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில், வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைத்தடுப்புக்காவலர்கள், 12 நம்பர் தேயிலை காட்டில்,ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 5 வயது ஆண் யானை இறந்து கிடப்பதை கண்டறிந்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின் பேரில், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் கவுதம் ஆகியோர், இறந்த யானையை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இறந்த ஆண் யானை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. யானையின் உடலில் இருந்து (சிறுநீரகம். இருதயம், குடல் மற்றும் நுரையீரல்) சேகரிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின் சம்பவ இடத்திலேயே யானையின் உடல் புதைக்கப்பட்டது,' என்றனர்.