சென்னை:செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரசை விழுங்கி வரும் ஆம்ஆத்மி கட்சி, தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு மாற்றாக உருவெடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
சமூக சேவகர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, விருப்ப ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரியான அரவிந்த் கெஜ்ரிவால், 2013-ல் ஆம்ஆத்மி கட்சியை துவங்கினார்.
டில்லி சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கிய ஆம்ஆத்மி, 28 இடங்களை பெற்று, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. காங்கிரஸ் ஆதரவுடன் டில்லி முதல்வரான கெஜ்ரிவால், 49 நாட்களில் ராஜினாமா செய்தார்.
கடந்த 2015-ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் 70 தொகுதிகளில், 67-ல் வென்று, பா.ஜ., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு, ஆம்ஆத்மி அதிர்ச்சி அளித்தது. 2020 தேர்தலிலும் வென்று, கெஜ்ரிவால் முதல்வராக இருக்கிறார். இப்போது, பஞ்சாப் மாநிலத்திலும், ஆம்ஆத்மி ஆட்சியில் உள்ளது.
இந்த உற்சாகத்தில் குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலிலும் ஆம்ஆத்மி களமிறங்கியது. டில்லி மாநகராட்சி தேர்தல் நடந்தபோதும், கெஜ்ரிவால், குஜராத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்தார்.
அதற்கு பெரும் பலன் கிடைத்துள்ளது. ஐந்து இடங்களில் வென்றதுடன், 12.9 சதவீத ஓட்டுகளை பெற்று, மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குஜராத்தில் கிடைத்த வெற்றியால், பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்து, பெரிய தேசிய கட்சியாக ஆம்ஆத்மி உருவெடுத்துள்ளது.
ஆம்ஆத்மி வெற்றி பெறும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
டில்லியில், 40 சதவீத ஓட்டு வங்கி வைத்திருந்த காங்கிரஸ், ஒற்றை இலக்கத்திற்கு வந்து விட்டது. அதுபோல, ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்த பஞ்சாபிலும், காங்கிரஸ் ஓட்டு வங்கியில் பெரும் சேதம் ஏற்பட்டது.
குஜராத்தில், 2017 சட்டசபை தேர்தலில், 77 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், இந்த முறை வெறும் 17 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. ஓட்டு சதவீதமும் 27 சதவீதமாக சரிந்துள்ளது.
காங்கிரஸ் வீழ்ச்சிக்கு, ஆம்ஆத்மி காரணமாக இருந்துள்ளதையே, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
டில்லி, பஞ்சாபை தொடர்ந்து காங்கிரஸ் அடிப்படை ஒட்டு வங்கியை, குறிப்பாக சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை, ஆம்ஆத்மி விழுங்கியுள்ளது. அக்கட்சி 1.10 சதவீத ஓட்டுகள் பெற்ற, ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது.
குஜராத்தை போல, இங்கும் ஆம்ஆத்மி ஓட்டுக்களை பெற்றிருந்தால், காங்கிரஸ் தோல்வி அடைந்திருக்கும்.
டில்லி, பஞ்சாபில் அசைக்க முடியாக சக்தியாக உருவெடுத்துள்ள ஆம்ஆத்மி, இப்போது குஜராத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இதனால், தேசிய அளவில் காங்கிரஸ் இடத்தை பிடித்து, பா.ஜ.,வுக்கு மாற்றாக உருவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆம் ஆத்மியின் வெற்றி பயணம் தொடருமா அல்லது காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுமா என்பதை, 2023-ல் நடக்கவுள்ள கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களும், 2024 லோக்சபா தேர்தலும் தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.