பொள்ளாச்சி;கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சியில் நடந்தது.
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் வாழ்வாதார போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி ராஜேஸ்வரி மஹால் அருகே நடந்தது.
தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கதிரேசன், சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பி.ஏ.பி., பாசன பகுதி, கரையோர விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பி.ஏ.பி., பாசனத்தில் கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்க கூடாது.
கால்வாயில் இருந்து, விவசாய கிணற்றின் மின் இணைப்புக்கான இடைவெளி குறித்து அளவீடு செய்வதை நிறுத்த உத்தரவிட வேண்டும். விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம்.
தலைமுறை, தலைமுறையாக உள்ள மின் இணைப்பை, அனைத்து ஆவணங்களையும் சமர்பித்து பெற்று, விவசாயம் செய்யும் விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்க வழங்கிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் மீது, மாவட்ட, மாநில அளவில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட குழுக்களில், விவசாய சங்க பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் நிருபர்களிடம் கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவுப்படி, பி.ஏ.பி., கால்வாய் அருகே உள்ள விளைநிலங்களின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து வருகின்றனர்.
கடந்த, 1967ம் ஆண்டு சட்டத்தை, 50 ஆண்டுகள் கழித்து கையில் எடுத்து, கிணறுகளின் மோட்டார் மின் இணைப்புகளை துண்டிக்கின்றனர். இதுகுறித்து, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சாரத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவிப்போம். நடவடிக்கை இல்லையெனில், அடுத்த கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்படும்,'' என்றார்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், சப் - கலெக்டர் பிரியங்காவை சந்தித்து மனு கொடுத்து, மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், என வலியுறுத்தினர்.
விவசாய சங்க நிர்வாகிகளிடம் மனு பெற்ற, சப் - கலெக்டர் கூறியதாவது:பி.ஏ.பி., கால்வாய்கள் அருகே, 300 மீட்டர் அளவுக்கு உள்ள, வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் மின் இணைப்புகள் மட்டுமே தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த, 1967ம் ஆண்டுக்கு பிறகு உள்ள கிணறுகளின் மோட்டார் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துகிறோம். நீங்களும் நீதிமன்றத்தில் உங்களது தரப்பில் கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இதனால், சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, விவசாய சங்க நிர்வாகிகள் விரக்தியுடன் வெளியேறினர்.