வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:......
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
![]()
|
தி.மு.க., அரசு பதவியேற்றது முதல், தங்கள் கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர்களுக்கு, நினைவிடம் அமைப்பதிலும், சிலை வைப்பதிலும் தான், அதிக கவனம் செலுத்தி வருகிறது. சென்னையில், பள்ளிக் கல்வித் துறை செயல்படும் வளாகத்தில், முன்னாள் அமைச்சர் அன்பழகனின் உருவச்சிலையை நிறுவி, அந்தப் பகுதிக்கு, 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என, பெயர் சூட்ட முடிவெடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பள்ளிக்கல்வித் துறை பல குளறுபடிகளோடு இயங்கி வருகிறது. அரசுப் பள்ளிகளில் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லை; தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பல ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க முடியவில்லை; பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் வழங்க இயலவில்லை. இப்படி பல பிரச்னைகள் உள்ளன...
அவற்றை சரிசெய்வதை விடுத்து, மறைந்த தலைவருக்கு சிலை வைப்பதில் ஆர்வம் காட்டுவது, ரோமாபுரி பற்றி எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த நிகழ்வையே நினைவூட்டுகிறது.
ஏற்கனவே, சென்னை நந்தனம் நீதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும், அன்பழகனின் மார்பளவு சிலையை திறந்து வைத்து, அந்த வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் மாளிகை என்று பெயர் சூட்டியிருக்கிறார் ஸ்டாலின். அத்துடன், அன்பழகன் எழுதிய நுால்களை நாட்டுடமையாக்கி, அதற்கு ஈடாக, 25 லட்சம் ரூபாயை அவரின் வாரிசுகளுக்கும் வழங்கியிருக்கிறார்; அன்பழகனை கவுரவிக்க இது போதாதா?
கல்வித் துறையை மேம்படுத்தவும், தமிழ் மொழியை வளர்க்கவும் அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள் பலரது வரலாற்றை மறைத்து, திராவிடத்தை துாக்கி நிறுத்த முற்பட்ட, தங்கள் கட்சியின் தலைவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றனர் ஆட்சியாளர்கள்.
'தமிழ் தாத்தா' என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர், தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி அளப்பரியது. அழியும் நிலையிலிருந்த, பண்டைய தமிழ் இலக்கிய நுால்களை தேடிப்பிடித்து அச்சிலேற்றி, தமிழின் தொன்மையையும், சிறப்புகளையும் உலகறியச் செய்தவர் அவர். அவரைப் போல, ஏராளமான தமிழ் அறிஞர்கள் உள்ளனர்; அவர்களை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை.
'நீண்ட காலமாக தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்ததுடன், பலமுறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் அன்பழகன்.
![]()
|
'இதைத் தாண்டி, கல்வித் துறைக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அன்பழகன் செய்த பங்களிப்பு என்ன? மக்கள் வரிப்பணத்தை வீணடித்து, சிலை வைக்கும் அளவுக்கு, இந்த நாட்டுக்கு அவர் செய்த தியாகம் தான் என்ன?' என்று கேட்டால், தி.மு.க.,வினர் பதில் சொல்ல மாட்டார்கள்.
தமிழகத்தில், நவோதயா பள்ளிகள் வரவிடாமல் தடுப்பதுடன், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும் அமல்படுத்தாமல், திராவிட மாடல் கொள்கையை நிலைநாட்டி வரும் முன்னாள், இந்நாள் கல்வி அமைச்சர்களான தங்கம் தென்னரசு, மகேஷ் போன்றோருக்கும், நாளை சிலை வைத்தாலும் ஆச்சரியமில்லை.