புதுடில்லி-ஜல்லிக்கட்டு வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டனர்.
பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் 2017ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு 2017ல் திருத்தம் செய்தது.
இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, 'பீட்டா' எனப்படும் விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த மனுவை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விசாரித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் தரப்பு வாதங்களை ஒரு வாரத்திற்குள் தொகுத்து எழுத்துப்பூர்வமாக அளிக்க உத்தரவிட்டதுடன், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.