தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் 2ஆயிரம் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளாக ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் சிகிச்சை பெறுகின்றனர்.
இம் மருத்துவமனை தேனி-மதுரை ரோட்டில் அமைந்துள்ளதால் எட்டிபார்க்கும் துாரத்தில் வைகை ஆறு, மிக அருகில் வைகை அணையும் உள்ளது.
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பயன்பாட்டிற்காக வைகைஅணையில் இருந்து 2லட்சம் லிட்டர், குன்னுார் குடிநீர் திட்டத்தில் 3லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாக கூறுகின்றனர்.
ஆனால் நோயாளிகள் தங்கியுள்ள வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதனால் உள்நோயாளிகளும் அவர்களுடன் வரும் உதவியாளர்கள் பெரும்பாலும் கடைகளில் விற்கும் பாட்டில் குடிநீரை வாங்கியே பருகுகின்றனர்.
சிகிச்சை,உணவு இலவசம் என்றாலும் குடிநீருக்கு தினமும் ரூ.60முதல் 80 வரை செலவிடுகின்றனர்.
பாட்டில் குடிநீர் வாங்க வசதியற்றவர்கள் பலர் கடைகளில் கை கழுவும் நீரை எடுத்து சென்று பருகும் அவல நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் சில இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன.
அவற்றில் சரியாக குடிநீர் கிடைப்பது இல்லை. இதனால் மருத்துவ கல்லுாரியை சுற்றியுள்ள கடைகளில் குடிநீர் பாட்டில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
வார்டுகளில் உள்ள கழிப்பறைகளில் பல நேரம் தண்ணீர் வராததால் கட்டண கழிப்பறை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகுகின்றனர். வார்டுகளில் குடிநீர் 24 மணிநேரமும் கிடைப்பதை நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்.
இதுகுறித்து மருத்துவகல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், வார்டில் உள்ள நோயாளிகள் தண்ணீர் பற்றாகுறையை பணியில் உள்ளவர்களிடம் தெரிவிக்கலாம். புகார்,குறைகள் கூறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனையில் சுகாதரமான குடிநீர் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கு வரும் பலர் இங்கு வழங்கப்படும் குடிநீர் சரியில்லை என நினைத்து கடைகளில் வாங்குகின்றனர்,'' என்றார்.