வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை, -மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு தேவையான ரயில்வே வளர்ச்சி திட்டங்களை கேட்டு பெறவும், தாமதப் பணிகளை விரைந்து முடிக்கவும் கேரளா அரசு பின்பற்றுவதுபோல் தமிழகத்திலும் ரயில்வே அமைச்சர் நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முன்வரவேண்டும்.
![]()
|
மத்திய அரசின் ரயில்வே துறை மாநிலங்களுக்கு தேவையான ரூ.பல கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமூக உறவு நீடிக்கும்பட்சத்தில் மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் தடையின்றி வந்துசேரும். மத்திய அரசுடனான உரசல் போக்கு, மாநில அரசியல், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய முன்னுரிமை, வருவாய் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வளர்ச்சி திட்டங்களை கேட்டு பெறுவதில் சில இடையூறுகள் உள்ளன.
இதுபோன்ற இடைவெளியை சரிசெய்ய கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது அமைச்சரவையில் ரயில்வேக்கு அப்துல்ரஹீம் என்பவரை அமைச்சராக நியமித்துள்ளார். ரயில்வே வளர்ச்சி திட்டங்களை கேட்டு பெறுவதில் தமிழகத்தை விட கேரளா கூடுதல் கவனம் செலுத்துகிறது. அதை பின்பற்றி தமிழகத்திலும் ரயில்வே திட்டங்களை கண்காணிக்கவும், புதிய வளர்ச்சிக்கான பரிந்துரைகளை அளிக்கவும் அமைச்சர் பதவி புதிதாக ஏற்படுத்தலாம்.
இதன் மூலம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கும் திண்டுக்கல் -குமுளி -சபரிமலை, மதுரை - அருப்புக்கோட்டை - துாத்துக்கடி, ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி, இருங்காட்டுக்கோட்டை - ஆவடி, முறப்பூர் - தர்மபுரி, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்துார், ஈரோடு - பழநி, சென்னை - கடலுார் போன்ற ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளலாம். முதல்வர் ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வே டி.ஆர்.இ.யூ., இணை செயலாளர் சங்கரநாராயணன் கூறியதாவது:
இவ்விஷயத்தில் நாம் உடனடியாக கேரளாவை பின்பற்ற வேண்டும். கேரளாவில் ரயில்வே இருப்பு பாதை மொத்த நீளம் 1257 கி.மீ., ஆகும். 178 ரயில் நிலையங்கள் உள்ளன. தற்போதுள்ள மாநிலத்தில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பதவிஅங்குள்ள ரயில்வே திட்டங்களை விரைவில் நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுப்பது, ரயில்வே திட்டங்களுக்கு மாநிலத்திற்குள் நிலம் ஆர்ஜிதம் செய்ய உதவுவதற்கு உறுதுணையாக உள்ளது. மத்திய அரசுக்கு ஒரு பாலம் போல் அமைச்சர் செயல்படுகிறார்.
தமிழகத்தில் ரயில்வே இருப்பு பாதை மொத்த நீளம் 5,952 கி.மீ., ஆகும். இங்கு 532 ரயில்வே நிலையங்கள் உள்ளன. கேரளாவை ஒப்பிட்டால் தமிழகத்தில் பாதை நீளம் அதிகம்; ரயில்வே நிலையங்கள் எண்ணிக்கையும் அதிகம். எனவே ரயில்வே திட்டங்களை கண்காணிக்க தனியாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டால் திட்டங்கள் விரைவில் நிறைவேறவும், புதிய திட்டங்களுக்கு வழிவகுக்கவும் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
![]()
|
தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. அப்போது நடக்கும் அமைச்சரவை மாற்றத்திலேயே ரயில்வே அமைச்சர் பதவி உருவாக்கவும் முதல்வர் ஸ்டாலின் மனது வைக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.