புதுச்சேரி : வங்கக் கடலில் தீவிரமடைந்துள்ள மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்க உள்ளதால், புதுச்சேரி, காரைக்காலில் கடலோர கிராமங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசு துறைகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மாண்டஸ் புயலாக உருவெடுத்துள்ளது. இப்புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். அதன் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் கன மழையும் பெய்யும் என வானிலை மையம் 'ரெட் அலெர்ட்' விடுத்துள்ளது.
குறிப்பாக இன்று 9 ம் தேதி காலை 8.30 மணி முதல் நாளை 10ம் தேதி காலை 8.30 மணி வரை கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல், மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்தாலும், அதன் தாக்கம் புதுச்சேரி, காரைக்காலில் இருக்கும் என்பதால் மாநிலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
அனைத்து அரசு துறைகளும் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 239 அரசு பள்ளிகள் தங்குமிடமாக மாற்றப்பட்டு, அங்கு பொதுமக்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கரையேறிய படகுகள்
புயல் சின்னம் காரணமாக கடல் கொந்தளிப்பாக உள்ளது.10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து மிரட்டியது. மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
தேங்காய்திட்டு துறைமுகத்தில் அனைத்து ஆழ்கடல் விசைப்படகுகளும் கரையேற்றப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியில் 24, காரைக்காலில் 20 என மொத்தமுள்ள 44 மீனவ கிராமங்களிலும் படகுகள் கரையேற்றப்பட்டுள்ளன.
கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பிள்ளைச்சாவடி, சின்னமுதலியார்சாவடி கடலோர கிராமங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்க எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேனர்கள் அகற்றம்
தானே புயலின்போது பேனர்கள், கட் அவுட்கள் சரிந்து அதிக சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகம் 114 தடையுத்தரவு பிறப்பிததுள்ளது.அதனையொட்டி, பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களை நேற்று உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறையினர் போலீசார் உதவியுடன் அதிரடியாக அகற்றினர்.
மீட்பு குழு வருகை
புயல் காரணமாக அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே 40 பேர் அடங்கிய, இரண்டு தேசிய மீட்பு குழு வந்துள்ளது. நேற்று மேலும் 20 பேர் கொண்ட தேசிய மீட்பு குழு புதுச்சேரிக்கு வந்தது. இக்குழுவினர், தாழ்வான பகுதிகளிலும், கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பிள்ளைச்சாவடி கடலோர பகுதிகளை ஆய்வு செய்தனர். பூமியான்பேட்டை, என்.ஆர்.நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மீட்பு குழுவினர் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
24 மணி நேரம்
புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி,காரைக்காலில் உள்ள 44 ஆரம்ப சுகாதார சுகாதார நிலையங்களையும் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் திறந்திருக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் அவசரமாக பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மரங்களை அகற்ற..
புயலில் மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றும் வகையில் தீயணைப்பு துறை, உள்ளாட்சி துறை, வனத் துறை, போலீசார் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு துறைக்கு 8, போலீசாருக்கு 2 எலக்ட்ரிக் மரம் வெட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. பேரிடர் துறையில் அவசர தேவைக்கு 2 எலட்ரிக் மரம் வெட்டி கருவியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
75 ஆயிரம் பேருக்கு உணவு
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக லாஸ்பேட்டையில் உள்ள அட்சயபாத்திரம் மட்டுமின்றி கூனிச்சம்பட்டு, கல்மண்டபம், குருசுக்குப்பம் உள்ளிட்ட மத்திய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முகாமில்களில் பிரட், பால் கொடுக்கவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே இன்று 9ம் தேதியும், நாளை 10ம் தேதி வரை புதுச்சேரி,காரைக்காலில் உள்ள பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புயல் சின்னம் உருவாகக் சூடிய சூழல் நிலவியதால் கடந்த 6ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்பட்டிருந்தது.நேற்று காலை குறைந்த காற்றழுத்த பகுதி புயலாக மாறியதை தொடர்ந்து, துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை எச்சரிக்கும் வகையில் 2ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டது. இந்நிலையில் புயல் தீவிரமடைந்த கரையை நோக்கி நகர்ந்து வருவதை தொடர்ந்து , புயல் துறைமுகத்திற்கு இடது பக்கமாக கரையை கடக்கும் என்பதை குறிக்கும் வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.