புதுடில்லி : நம் நாட்டில் மிகப் பெரிய அளவில் கள்ள நோட்டு வினியோகத்தில் ஈடுபட்டு வந்த சர்வதேச மோசடி கும்பலை சேர்ந்த இருவரை புதுடில்லி சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
புதுடில்லியின் ஆன்ந்த் விஹார் ரயில் நிலையத்தில் வைத்து, மாபியா கதுான், 35, என்ற பெண்ணையும், முனிஷ் அகமது, 57, என்பவரையும் சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள்.
இது குறித்து புதுடில்லியின் சிறப்பு படை போலீஸ் துணை கமிஷனர் பி.எஸ்.குஷ்வா கூறியதாவது:
மாபியா கதுானிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளும், முனிஷ் அமதுவிடம் இருந்து 97 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்தோம்.
உண்மையான ரூபாய் நோட்டுகளுக்கும், இதற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகத்துல்லியமாக அச்சிட்டுள்ளனர். இந்த கள்ள நோட்டுக்களை, மேற்கு வங்கத்தின் மால்டாவில் இருந்து மாபியா பெற்றுள்ளார். இதை புதுடில்லியில் வினியோகிக்க முனிஷ் அகமதுவிடம் கொடுக்க வந்தபோது பிடிபட்டார்.
இவர்கள் இருவரும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்களை புதுடில்லியில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இவை, இந்தியா - வங்கதேச எல்லை வழியாக நம் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளது. இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.