சென்னை : ஹிந்து மதம் குறித்து அவதுாறாக பேசி வரும் திருமாவளவன் மீது, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி அளித்த புகார் மனு, மதுரை கமிஷனருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, போலீஸ் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சட்ட பிரிவு தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராமசாமி தாக்கல் செய்த மனு:
வி.சி., கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன், மதுரையில் நவ., 6ல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து மதத்துக்கு எதிராக, அவதுாறான கருத்துகளை தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சித்தாந்தம், குறிக்கோள், நோக்கம் குறித்தும், ஹிந்து மத சடங்குகள் குறித்தும், தொடர்ந்து அவர் அவதுாறான கருத்துகளை கூறி வருகிறார். உண்மைக்கு மாறான இதுபோன்ற கருத்துகளால், நாட்டில் ஒற்றுமையின்மையும், கலவரத்தையும் துாண்ட முயற்சிக்கிறார்.
திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, நவ., 6ல், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,க்கு, 'ஆன்லைன்' வாயிலாக புகார் அளித்தேன்.
அந்த புகார் மீது விசாரணை நடத்தி, திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்ய, காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அந்த புகார் மனு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கில், மதுரை கமிஷனரையும் எதிர் மனுதாரராக சேர்க்க, மனுதாரருக்கு உத்தரவிட வேண்டும்' என, வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதி, வழக்கில் மதுரை கமிஷனரையும் எதிர் மனுதாரராக சேர்க்க, ராமசாமிக்கு உத்தரவிட்டார்; விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.