வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள குன்னுார் ஆட்டோ டிரைவர் உமர் பாரூக், சம்பவம் நடந்ததும், 'வாட்ஸ் ஆப்' தகவல் பரிமாற்றத்தை அழித்தது என்.ஐ.ஏ., விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், 29, பலியானார்.
விசாரணையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவில்கள், அரசு அலுவலகங்களில் குண்டு வைக்கவும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் ஜமேஷா முபீன் திட்டமிட்டது தெரியவந்தது.
மாநகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முபீன் உறவினர்கள் இருவர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ., தனிப்படை விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, போத்தனுாரைச் சேர்ந்த முகமது தவுபீக், 25, நீலகிரி மாவட்டம், குன்னுாரைச் சேர்ந்த உமர் பாரூக், 39, உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ் கான், 28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
என்.ஐ.ஏ., விசாரணையில், முதல் கட்டமாக கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன், மொபைல் போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், அவர் குன்னுார் உமர் பாரூக்குடன் அடிக்கடி பேசியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இருவரும் அடிக்கடி 'வாட்ஸ் ஆப்'பில் உரையாடியுள்ளனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், அடிக்கடி கோவை, குன்னுார் என மாறி, மாறி பயணம் செய்து சந்தித்ததும், விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
கார் குண்டு வெடிப்பு நடந்தவுடன், வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தை உமர் பாரூக் அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜமேஷா முபீன் சதித்திட்டத்தில் உமர் பாரூக் முக்கிய கூட்டாளி என்பதை புரிந்து கொண்ட என்.ஐ.ஏ., தனிப்படையினர், அவரை கைது செய்தனர். அவர்களுடன் சந்திப்பில் பங்கேற்ற பெரோஸ் கானும் கைது செய்யப்பட்டார்.
ஜமேஷா முபீன், தன் நண்பரான முகமது தவுபீக்கிடம் ஒரு புத்தகத்தை கொடுத்துள்ளார். அதில், வெடிகுண்டு செய்வது தொடர்பான விபரங்கள் இடம் பெற்றிருந்தன.
அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், குறிப்பிட்ட அந்த புத்தகம் மட்டுமின்றி, மத அடிப்படைவாதம் தொடர்பான பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டன.
தவுபீக்கிடம் என்.ஐ.ஏ., தனிப்படையினர் விசாரித்து, அவருக்கும் சதித்திட்டத்தில் பங்கு இருப்பதை உறுதி செய்தனர்; இதையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார்.
வரும் நாட்களில், இம்மூவரையும் கஸ்டடியில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ., தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.