மும்பை : மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முதல் கட்ட விசாரணை துவங்கி உள்ளதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அளவுக்கு அதிகமான சொத்து குவித்துள்ளதால் இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் கவுரி பிடே என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் 'எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இன்றி யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
இதையடுத்து மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 'உத்தவ் தாக்கரே மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக முதல் கட்ட விசாரணை துவங்கியுள்ளது. மஹாராஷ்டிரா பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உத்தவ் தரப்பு வழக்கறிஞர் 'விசாரணை தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை; இது சட்ட நடைமுறைகளை அவமதிக்கும் செயல்' என்றார். இதையடுத்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.