ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டார்.
நேற்றிரவு 7: 16 மணிக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனின் காரில் துர்கா, ஆண்டாள் கோவில் ஆடிப்பூர பந்தலுக்கு வந்தார். செயல் அலுவலர் முத்துராஜா, பட்டர்கள் வரவேற்றனர்.
கொடிமரம், லட்சுமி நாராயணன் சன்னிதியை வணங்கி விட்டு ஆண்டாள் சன்னதிக்கு வந்த துர்கா, கிளி, இரண்டு மாலைகள், மூன்று தாமரை மலர்களையும் பட்டர்களிடம் கொடுத்து குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டார். அவரிடம் கோவில் சார்பில் கிளி, மாலை, பட்டு, குங்குமம் வழங்கப்பட்டது.
பின் உட்பிரகாரத்தில் தங்க விமானம், கண்ணாடி கிணறு, கண்ணாடி மண்டபம் தரிசித்து விட்டு வடபத்திர சயனர் சன்னதிக்கு வந்தார். அங்கு ஆண்டாள் நந்தவனம், வடபத்ரசயனர் சன்னதி, கோபால விலாசம், நரசிம்மர் சன்னதி, கொடிமரம், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை தரிசித்து விட்டு மதுரைக்கு புறப்பட்டார்.