வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு என. அரசு பணியாளர் தேர்வு வாரியம் துவங்க வேண்டும் என செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தி பேசினார்.
இதுகுறித்து அவர் ராஜ்யசபாவில் பேசியதாவது:
பிற மாநிலங்களை போன்று, புதுச்சேரியில் அரசு பணியாளர் தேர்வு வாரியம் இல்லாததால், அரசு பணிகளில் 'குரூப்-ஏ' மற்றும் 'பி' பிரிவு பதவிகளை யூ.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்படுகிறது. இதனால், இப்பணியிடங்களை புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இப்பிரச்னையில் அரசு தலையிட்டு, குரூப்-ஏ மற்றும் குரூப்-பி, பணியிடங்களை புதுச்சேரியை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதுச்சேரிக்கு பணியமர்த்தப்படும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காரைக்கால், மாகி அல்லது ஏனாம் பிராந்தியங்களில் பணி புரிய தயங்குகின்றனர்.
பலர் ராஜினாமா செய்கின்றனர். அல்லது தங்கள் சொந்த மாநிலங்களுக்குப் பிரதிநிதியாகச் செல்கின்றனர். இதனால் பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு நிர்வாகம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. குறிப்பாக, யூ.பி.எஸ்.சி., மூலம் பணிக்கு வரும் அரசு பள்ளிகளின் துணை முதல்வர்களுக்கு தமிழ் தெரியாது.
இதனால், மாணவர்களுடன் கலந்துரையாட முடியாததால் வெற்றிடம் ஏற்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்னைகளை இவர்களால் புரிந்து கொண்டு செயல்படமுடியவில்லை.
இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, புதுச்சேரிக்கு என்று தனி அரசு பணியாளர் தேர்வு வாரியம் இருந்தால், மத்திய அரசு ஒப்புதலுடன் குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களை புதுச்சேரியை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்ப சாத்திய கூறுகள் உண்டாகும். எனவே, புதுச்சேரிக்கு என தனியாக அரசு பணியாளர் தேர்வு வாரியம் அமைக்க உள்துறை அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என்றார்.