வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்., தலைமையில் லோக்சபா தேர்தலை சந்தித்தால் பா.ஜ. படுதோல்வியடையும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

ஹிமாச்சலப் பிரதேசம் சட்டசபை தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்., வெற்றிப்பெற்றதையொட்டி, புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்., கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதேபோல 6 மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களும், உத்தரப் பிரதேசத்தில் லோக்சபா இடைத்தேர்தல் நடந்தது.
அதில், குஜராத்தை தவிர பிற மாநிலங்களில் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. பா.ஜ., வசம் இருந்த ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்., ஆட்சியை பிடித்துள்ளது. சட்டீஸ்கர், ராஜஸ்தான் இடைத்தேர்தல்களில் காங்., வெற்றி பெற்றுள்ளது.

இது வரும் 2024 லோக்சபா தேர்தலில் காங்., கட்சியின் வெற்றிக்கான அறிகுறியாக உள்ளது. 33 சதவீதம் ஓட்டு கொண்ட பா.ஜ.,நாட்டை ஆட்சி செய்கிறது. 67 சதவீதம் ஓட்டு வங்கி உள்ள எதிர்கட்சிகள் பிரிந்துள்ளன.இந்த சூழல் மாற வேண்டும். மதசார்ப்பற்ற அணிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.,வை வீழ்த்த முடியும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு பாடம்.
சில மாநில கட்சிகள் காங்.,வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி ஓட்டுகளை பிரிக்கின்றன.அது பா.ஜ.,விற்கு சாதகமாகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விட்டுக் கொடுத்து காங்.,தலைமையில் லோக்சபா தேர்தலை சந்தித்தால் பா.ஜ. படுதோல்வியடையும். மதசார்ப்பற்ற கூட்டணி காங்.,கட்சி தலைமையில் அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.