வங்கக் கடலில் சுழலும் மாண்டஸ் புயல், நேற்று மாலை நிலவரப்படி, தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த தீவிர புயல், தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை நோக்கி, மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நிலப்பகுதியை நெருங்கும்போது, இன்று காலையில் அதன் தீவிரம் குறையும். அதன்பின் மேலும் படிப்படியாக நகர்ந்து, தமிழகம் - புதுச்சேரி நிலப் பகுதிக்குள் நுழைகிறது.
புயலின் மையப் பகுதி, இன்று நள்ளிரவுக்கு பின், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடைப்பட்ட கடலோர பகுதியில், மாமல்லபுரம் - சென்னை இடையே கரையை கடக்கிறது.
இதனையொட்டி கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும். கடலூரில் கடல் சீற்றம் அதிகம் காணப்படுகிறது. அலை 6 மீட்டர் உயரம் எழுகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.