மயிலாடுதுறை: மாண்டஸ் புயலால் மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் அலை சீற்றம் காரணமாக குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கனமழை பெய்து வருகிறது. அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களில் 10 அடிக்கு மேல் கடல் அலைகள் எழுந்து ஆர்ப்பரிக்கின்றன.
அலை எழுச்சியின் காரணமாக சீர்காழி தாலுக்கா தொடுவாய்,, மடவாமேடு, பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள சந்திரபாடி கிராமத்தில் கடல் நீர் கருங்கல் தடுப்புகளை கடந்து கிராமத்திற்குள் புகுந்து ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடல் நீர் புகுந்த கிராமங்களில் உள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடல் அலைகள் மேலிருந்து கிராமத்திற்குள் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து பாதுகாப்பு மையங்களுக்கு செல்பவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.