வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: திமுக துவங்கப்பட்டதில் இருந்தே ஹிந்து மதத்தையும், ஹிந்து மத பழக்க வழக்கங்களையும் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அவர்கள் ஹிந்து கோவில்களுக்கு செல்வதும் இல்லை, ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும் இல்லை.
திமுக.,வினர் திராவிடர் கொள்கையை பின்பற்றுவதால் அவர்கள் ஹிந்து மதத்தை ஏற்பதில்லை. ஒருகாலத்தில் இப்படி இருந்தது; ஆனால், தற்போது நிலைமையே வேறு. இத்தனை ஆண்டுகளாக ஹிந்து மதத்தை தள்ளிவைத்த திமுக.,வினர் இப்போது வேஷத்தை கலைத்து மத நிகழ்ச்சிகள், வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வளவு ஏன், முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தில் கூட அவர் ஹிந்து மத வழிபாடுகளை தவிர்த்து வந்தாலும், அவரது மனைவி துர்கா அடிக்கடி கோவில் கோவிலாக சென்று வழிப்படுவது தொடரதான் செய்கிறது. அந்த அளவிற்கு கோவில் வழிபாடில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்.
சில நாட்களுக்கு முன்பாக மயிலாடுதுறை வானகிரி கோவிலில் துர்கா தரிசனம் செய்தார். நேற்று (டிச.,8) ஸ்டாலினுடன் தென்காசி சென்ற துர்கா, அங்குள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ஸ்டாலினின் மகள் செந்தாமரையும் தூத்துக்குடியில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவிலில் சமீபத்தில் தரிசனம் மேற்கொண்டார்.

இப்படி சொந்த வீட்டிற்குள்ளேயே திமுக.,வின் கொள்கையை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினின் குடும்பத்தார் பின்பற்றுவதில்லை. அதேபோல், திராவிட கொள்கையை தீவிரமாக பின்பற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியனின் வீட்டில் கார்த்திகை திருநாளில் கோலமிட்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டதாக புகைப்படமும் வைரலானது.
அதே கொள்கையை பல ஆண்டுகளாக முழங்கி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் தன் சொந்த ஊரில் உள்ள கோவிலில் தன் அடையாளமாக கருதப்படும் கருப்பு துண்டையும் கழற்றி வைத்துவிட்டு, சாமி கும்பிட்டு, தீர்த்தம் பெற்ற நிகழ்வும் நடந்தேறியது.

பாவம் தி.க தலைவர் வீரமணி 90 வயது ஆகிவிட்டது. இன்னமும் ஹிந்து மத பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துவதாக இருக்கிறார். திமுக.,வினர் கோவில் கோவிலாக செல்வதை பார்த்து அவர் மனம் வெதும்பலாம். இப்போது வீரமணியை வெறுப்பேற்றும் பட்டியலில் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானும் சேர்ந்துள்ளார்.
பவானி கூடுதுறையில் பழமையான படித்துறை விநாயகர் கோவில் சென்ற அவர், பவானி, காவிரி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதியும் சங்கமிப்பதாக கூறப்படும் இடத்தில் இறங்கி தண்ணீரை தலையில் தௌித்துக்கொண்டார்.

பின்னர் படித்துறை விநாயகர் கோவிலில் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பூஜாரியிடம் ஸ்டாலின், துர்கா, அவர்களது மகன் உதயநிதி ஆகியோரின் பெயரை கூறி, தன்னுடைய பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்கிறார். தன் பெயருடன் கன்னி ராசி, அஷ்ட நட்சத்திரம் எனவும் தெரிவிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
