இந்த ஆண்டு மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், வங்கிகள் வைப்பு நிதிக்கு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. பல வங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் இப்போது 5 - 9 சதவீத வரம்பில் உள்ளன. சில சிறிய வங்கிகள் மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைக்கு சிறந்த வட்டி வருவாயை வழங்குகின்றன. அவை குறித்த பட்டியல் இங்கே...
சிறிய வங்கிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பலருக்கும் எழக்கூடும். சிறு நிதி வங்கிகளும் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ஆர்.பி.ஐ., கண்காணிப்பின் கீழே வருகின்றன. இது தவிர ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத் தொகைக்கு காப்பீடு உள்ளது. அதாவது எதிர்பாராத சந்தர்ப்பத்தில் வங்கி நொடித்துப் போனாலும் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட் திரும்ப கிடைத்துவிடும் என்ற உத்தரவாதத்தை அரசு வழங்கியுள்ளது. எனவே சிறிய வங்கிகளும் டெபாசிட் செய்ய ஏற்றவையே.
யூனிட்டி சிறு நிதி வங்கி
இந்த வங்கி (SFB) மூத்த குடிமக்களுக்கு 4.5% முதல் 9% வரை வைப்புத் தொகைக்கு வட்டி வழங்குகிறது. 501 நாட்களுக்கு முதலீடு செய்யப்படும் நிலையான வைப்புத் தொகைகளுக்கு ஆண்டுக்கு 9% வட்டி வழங்குகிறது. மற்றவர்களுக்கு 8.50% வட்டி வழங்குகிறது. யூனிட்டி வங்கிக்கு தமிழகத்தில் கிளைகள் இல்லை. பெங்களூரு, விஜயவாடா, டில்லி, மும்பை, கொல்கத்தா, சூரத், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் கிளைகள் உண்டு.
![]()
|
சூர்யோதய் சிறு நிதி வங்கி
சூர்யோதய் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 6, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. பொதுவான வைப்புத் தொகைக்கு 4% முதல் 9% வரையிலும் மூத்த குடிமக்களுக்கு 4.5% முதல் 9.59% வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது. ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான முதிர்வுகளுடன் இந்த வட்டி வருவாய் கிடைக்கும்.
உஜ்ஜீவன்
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கிக்கு சென்னை உட்பட தமிழகம் முழுக்க கிளைகள் உண்டு. இவ்வங்கி பொது மக்களுக்கு அதிகபட்சமாக 8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டி வழங்குகிறது.
உத்கர்ஷ்
உத்கர்ஷ் சிறு நிதி வங்கிக்கு சென்னை, கோவை, சேலம், திருச்சியில் மட்டும் கிளைகள் உண்டு. பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 8% வட்டியையும், , மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.75% வட்டியையும் வழங்குகிறது. அதிக வட்டிக்கு ஏற்ப முதிர்வுகாலம் கூடும்.