வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொடைக்கானல்: கொடைக்கானலில் கொட்டும் மழையிலும், தங்களின் உயிரை பணயம் வைத்து மின்பாதையை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை சமாளிக்க முன்கள பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின் கம்பங்கள் சாய்ந்தாலும், அதன் மீது மரங்கள் விழுந்தால் அதனை அகற்றவும், மின் விநியோகம் பாதிக்கப்படும் போது அதனை சரி செய்யவும் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், கொடைக்கானலில் நேற்று(டிச.,8) பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், நகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர். உடனடியாக தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், மழையை பொருட்படுத்தாமல், நகர் பகுதிகளில் மின்கம்பங்களில் ஏறி மின்வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களின் நலனுக்காக பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஊழியர்களின் இந்த பணியை சிலர் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அது வைரலாக பரவி வருகிறது. ஊழியர்களை பாராட்டி நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.