வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று (டிச.,10) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல், சென்னையின் தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 11:30 மணி முதல் நாளை அதிகாலை 2:30 மணிக்குள் புதுச்சேரி - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலோர மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாலை முதல் இன்று காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதால், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலுார் , கள்ளக்குறிச்சி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், நாகை , திருப்பத்தூர் ஆகிய 16 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலையில் இன்று துவங்கவிருந்த செமஸ்டர் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை, இணைப்பு கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி பிறகு அறிவிக்கப்படும்.