வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பொது சிவில் சட்ட மசோதாவை, பா.ஜ., எம்.பி., ராஜ்யசபாவில் தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பா.ஜ.,வை சேர்ந்த கிரோடி லால் மீனா என்பவர், தனி நபர் மசோதாவாக பொது சிவில் சட்டம்-2020' ஐ தாக்கல் செய்தார். ஆனால், அதனை எதிர்ப்பு கிளம்பியது. இது நாட்டின் பன்முக கலாசாரத்தை புண்படுத்தும், நாட்டை சிதைக்கும் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போது, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறுகையில், அரசியலமைப்பு வழிகாட்டுதல் கொள்கையின் கீழ் உள்ள ஒரு பிரச்னையை எழுப்புவதற்கு எம்.பி.,க்கு சட்டப்பூர்வமான உரிமை உள்ளது. இந்த மசோதா குறித்து அவை விவாதிக்கட்டும். இந்த நேரத்தில் அரசு மீது அவதூறு எழுப்புவது, அரசை விமர்சிக்க முயற்சி செய்வது தேவையற்றது என்றார்.
இதனையடுத்து, அவைத்தலைவர் ஜக்தீப் தங்கர் , இந்த மசோதாவை எடுத்து கொள்வது குறித்து ஓட்டெடுப்பு நடத்த விவாதத்திற்கு அனுமதி அளித்தார். முடிவில் நடந்த ஓட்டெடுப்பில், மசோதாவிற்கு ஆதரவாக 63 ஓட்டுகளும், எதிராக 23 ஓட்டுகளும் கிடைத்தன.
கம்யூனிஸ்ட் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் கூறும்போது, சட்ட கமிஷன் பரிந்துரைப்படி, பொது சிவில் சட்டம், தேவையற்றது. அவசியமற்றது என்றார்.
திமுக எம்.பி., திருச்சி சிவா பேசும்போது, பொது சிவில் சட்டம், மதசார்பின்மைக்கு எதிரானது.
சமாஜ்வாதி எம்பி ஆர்ஜி வர்மா பேசும் போது, மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அரசியல் சட்ட விதிகளுக்கு எதிரானது என்றார்.

பா.ஜ., எம்.பி., ஹர்நாத் சிங் யாதவ், பூஜிய நேரத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்திருந்தார். ராஜ்யசபாவில் தாக்கல் செய்த மசோதாவில், இந்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து தேசிய ஆய்வு மற்றும் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த மசோதா அறிமுகம் செய்ய முடிவு செய்தாலும், தாக்கல் செய்யப்படவில்லை.
கடந்த 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலின் போது, ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்துவோம் என பா.ஜ., வாக்குறுதி அளித்திருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலின் போதும், பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.