வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை:குத்தாலம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உள்ளிட்ட இருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சந்திரா.45. திருமணமாகாத இவர் மாலை அதே பகுதி சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆட்டை ஓட்டச் சென்றுள்ளார் அப்போது காற்றின் காரணமாக அறுந்து விழுந்து கிடந்த மின்சார ஒயரை எதிர்பாராத விதமாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி சந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்திராவை காப்பாற்ற சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன்.17. என்பவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் உள்ளிட்ட இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.