வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புயல் எச்சரிக்கை தொடர்பாக, 58.47 லட்சம் பேருக்கு, எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
அவரது அறிக்கை:
வங்கக் கடலில் உருவான புயல் தொடர்பாக, 58.47 லட்சம் பேரின் மொபைல் போன்களுக்கு, எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.கிழக்கு கடற்கரைப் பகுதியில், மீன் பிடிக்க சென்ற, 512 படகுகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன. மேற்கு கடற்கரைப் பகுதியில் 459 படகுகள் பாதுகாப்பாக உள்ளன.
![]()
|
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில மீட்புப் படை யின், 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர். கடலுார், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், 121 வீரர்கள் அடங்கிய, மூன்று குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாநில, மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள், 24 மணி நேரமும் இயங்குகின்றன. நெடுஞ்சாலை, நீர்வளத் துறை, மின் வாரியம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகள் களப் பணியாற்ற, தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புயல் காலத்தில் செய்ய வேண்டியவை
ஆதார், ரேஷன் அட்டை, கல்வி சான்றிதழ் உள்ளிட்ட, முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும். ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இறுக மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வீட்டின் மின் இணைப்பு மற்றும் 'ஸ்விட்ச்'கள் அணைக்கப்பட்டுள்ளதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்
செய்யக் கூடாதவை
கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். புயல் கடக்கும் நேரத்தில், கட்டடங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் மற்றும் கன மழை நேரங்களில், பழைய கட்டடம் மற்றும் மரத்தின் கீழ் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.