'மாண்டஸ்' புயல் காரணமாக, நாகை, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட பகுதிகளில், வங்க கடல் வழக்கத்திற்கு மாறாக, கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்ததால் மரங்கள், வீடுகள் சாய்ந்து, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயலால், நாகையில் நேற்று முன்தினம் முதல், கடும் குளிருடன் மழை கொட்டி வருகிறது. கடல் பரப்பில் வேகமாக காற்று வீசி வருகிறது.
கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக, 6 அடி உயரத்தில் எழும்பி, ஆக்ரோஷத்துடன் கரையை தாக்கின. இதனால் கடலோரத்தில் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தாண்டி கடல்நீர் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்தது.
நாகூர் பட்டினச்சேரியில் கடலோரத்தில் இருந்த, 10 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், ஆரிய நாட்டுத்தெரு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்த கடல்நீரால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
முகாம்களில் உள்ள மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் அருண் தம்புராஜ், பட்டினச்சேரியில் கடல் நீரில் இறங்கிச் சென்று, கடல் அரிப்பு பாதிப்புகளை பார்வையிட்டார்.
புதுச்சேரி
புதுச்சேரி பகுதிகளான பிள்ளைச்சாவடி, சின்னக்காலாப்பட்டு, பெரியக்காலாப்பட்டு பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டு வருவதால், படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர்.
குறிப்பாக, பிள்ளைச்சாவடியில் கடும் கடலரிப்பு ஏற்பட்டு, சாலை, மீன் உலர் கூடம், தென்னை மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அச்சுறுத்தல் நிலவி வந்தது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக நேற்று காலை கடல் அலைகள் ஆக்ரோஷமாக ஊருக்குள் புகுந்ததால், 13 வீடுகள் இடிந்து விழுந்தன.
கடலரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதி மீனவர்கள் நேற்று காலை, 9:30 மணிக்கு, இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.
அங்கு வந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உழவர்கரை தாசில்தார் ராஜேஷ் கண்ணா ஆகியோர், மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம், 'கடலரிப்பை தடுக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் கருங்கற்கள் கொட்டப்பட உள்ளது' என்றனர்.
இதையேற்று மீனவர்கள் காலை, 10:00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
படகுகள் சேதம்
'மாண்டஸ்' புயலால், நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
இதனால் பாம்பன் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் கடற்கரையில் நிறுத்தி இருந்த படகுகளில் இரு விசைப்படகுகள் மற்றும் நான்கு நாட்டு படகுகளின் நங்கூர கயிறு இழுத்துச் செல்லப்பட்டு, படகுகள் கரை ஒதுங்கின.
இதனால் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதமடைந்தன.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய், மடவாமேடு, பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி தாலுகா பெருமாள்பேட்டை, சந்திரபாடி ஆகிய கிராமங்களில் கடல் நீர் கருங்கல் தடுப்புகளை கடந்து கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இக்கிராம மக்கள் அருகிலுள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்கு சென்று தங்கி உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புயலினால் நேற்று அதிகாலை முதல் வீசிய காற்றின் காரணமாக ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்களை, மின்சார துறை ஊழியர்கள் அகற்றினர்.
- நமது நிருபர் குழு -
Advertisement