முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே மொபைல் போனில், 'செல்பி' எடுத்தபடி அரசு பஸ் ஓட்டிச் சென்ற டிரைவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் டிப்போவில் இருந்து இயக்கப்படும், '2 பி' அரசு டவுன் பஸ்சை நேற்று முன்தினம் டிரைவர் தேவபிரபு ஓட்டிச் சென்ற போது, மொபைல் போனில் செல்பி வீடியோ எடுத்தபடி பஸ்சை இயக்கினார்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
'போக்குவரத்து விதிகளை மீறி, விபத்து அபாயத்தில் பஸ்சை ஓட்டிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, டிப்போ அதிகாரிகள் விசாரணை நடத்தி, டிரைவர் தேவபிரபுவை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டனர்.