கொடுங்கையூர், :கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில் கடந்த 3ம் தேதி, தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வியாசர்பாடி பகுதியில் ரவுடியாக வலம் வந்த 'வெள்ளை' பிரகாஷ், 31, மற்றும் அவரது கூட்டாளியான செங்குன்றத்தைச் சேர்ந்த விக்கிரமாதித்தன், 36, சிக்கினர். ஒரு துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 35 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின் அவர்கள் கொடுங்கையூர் கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இருவரும், புளியந்தோப்பை சேர்ந்த 'பாம்' சரவணன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகளை பொது இடத்தில் அழித்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படும் என்பதால், குப்பை கிடங்கில் அழிக்க போலீசார் முடிவு செய்தனர்.
எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன், வெடிகுண்டு நிபுணர் ஜெயராமன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து அப்புறப்படுத்தினர்.