அண்ணா நகர், :ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்தவர் பிரசாத், 32. சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில் தங்கி, குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கத்தில், தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்தார்.
இவர், தன் உறவினரான திருச்செந்துார், ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாபிலோனா, 23, என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. பாபிலோனா ஈக்காட்டுத்தாங்கல், விநாயகபுரம் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தார்.
இவர்களுக்கு திருமணம் செய்ய, இரு வீட்டாரும் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, பிரசாத் தன் இருசக்கர வாகனத்தில் பாபிலோனாவை அழைத்துக் கொண்டு, வடபழநி 100 அடி சாலையில் சென்றார்.
அரும்பாக்கம், மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 'யூ டர்ன்' செய்த போது, அம்பத்துாரில் இருந்து வடபழநி நோக்கி, இரும்பு கம்பி ஏற்றி வந்த டிரெய்லர் லாரி, பிரசாத் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் மீதும், லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் பொன்னன், 36, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.