அண்ணா சாலை ராயப்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதி, அண்ணா சாலை - ஒயிட்ஸ் சாலை இணையும் நடைபாதையில் 45 அடி உயரத்தில் கம்பம் நடப்பட்டு, அதில் தி.மு.க., கொடியை பறக்க விட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வந்து செல்லும் அண்ணா சாலை பகுதியில், நடைபாதையில் கம்பம் நடப்பட்டு, தி.மு.க., கொடி பறக்கவிடப்பட்டு உள்ளது.
'மாண்டஸ்' புயலிலோ அல்லது அடுத்து வரும் புயலிலோ இந்த கம்பம் விழுந்தால், பலரும் பாதிக்கப்படுவர்; உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது.
மக்களின் வரி பணத்தில், பொதுமக்கள் பயன்படுத்தும் இடத்தில், தி.மு.க.,வினர் அத்துமீறி இவ்வளவு பெரிய கொடி கம்பம் வைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம், இந்த கொடி கம்பத்தை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொடி கம்பம் குறித்து, மொபைல் போனில் ஒருவர் பேசி, வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மக்களின் சொத்தான நடைபாதையில் தி.மு.க.,வின் கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது. மார்பிள் கற்கள் பதிக்கப்பட்ட கட்டுமானத்தில், கம்பம் நடப்பட்டு, நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
புயல் காற்றில் கம்பம் சாய்ந்து நான்கு பேர் இறந்தால் என்ன செய்வது, உங்கள் கட்சியினர் உயிர் போனால் பரவாயில்லையா? போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி அனுமதியின்றி, இந்த கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
ஒயிட்ஸ் சாலை, சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை சிக்னல் உட்பட பல இடங்களில், விதிகளை மீறி, பொது இடங்களில் தி.மு.க., கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்த கம்பங்கள், தி.மு.க., எம்.எல்.ஏ., உதயநிதியின் 45வது பிறந்தநாளை ஒட்டி நடப்பட்டுள்ளன.
இவற்றில் சில இடங்களில் கட்சியின் கொடியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஏற்றி வைத்தார்.
இவர் மீதும், விதிமீறி கம்பம் நட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன், 41, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒயிட்ஸ் சாலை, சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை சிக்னல் உட்பட பல இடங்களில், விதிகளை மீறி, பொது இடங்களில் தி.மு.க., கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்த கம்பங்கள், தி.மு.க., எம்.எல்.ஏ., உதயநிதியின் 45வது பிறந்தநாளை ஒட்டி நடப்பட்டுள்ளன. இவற்றில் சில இடங்களில் கட்சியின் கொடியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஏற்றி வைத்தார். இவர் மீதும், விதிமீறி கம்பம் நட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறப்போர் இயக்கம் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன், 41, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.