ஆவடி,:புயல் பாதிப்புகளை சமாளித்து மக்களுக்கு உதவ, ஆவடி மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை ஆவடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில், புயல், மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க, மாநகராட்சி, மின் வாரியம் மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான குடியிருப்பு பகுதிகளில், மழைநீரை அகற்ற, 20 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மழை வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், மரங்கள், மின் கம்பங்கள் விழுந்தால், அவற்றை உடனடியாக அகற்றவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், மேற்கண்ட துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர். அனைத்து துறையினரும், தேவையான உபகரணங்கள், வாகனங்களுடன், தகவல் தொடர்பில் உள்ளனர்.
இந்த நிலையில், ஆவடி காமராஜ் நகர், பூம்பொழில் நகர் ஆகியவற்றில், நேற்று அதிகாலை இரண்டு பெரிய மரங்கள் சாலையில் விழுந்தன. அவற்றை, மாநகராட்சி ஊழியர்கள், வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை 2:30 மணி அளவில் பெரம்பூர், பின்னி மில் வளாகத்தில் உள்ள, பெரிய மரம், டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலையில் விழுந்தது. இதனால், அந்த வளாகத்தின் தடுப்புச் சுவர் இடிந்தது. சென்னை மாநகராட்சி ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றினர்.
மின் கம்பத்திற்கு ' கட்டு'
ஆவடி மாநகராட்சி மற்றும் மின் வாரியத்தினர், மாநகராட்சி அலுவலக நுழைவு வாசல் அருகே, ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை, உறுதியான கயிற்றால் கட்டி, அதை மாநகராட்சி தடுப்பு சுவர் கம்பிகளுடன் இணைத்து கட்டி வைத்துள்ளனர்.
சிதிலமடைந்து, பல மாதங்களாக சாய்ந்துள்ள மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்காமல், புயல், மழை மீட்பு பணி என மாநகராட்சியும், மின் வாரியமும், சிலிர்த்தெழுந்திருப்பதை பார்த்து, பொதுமக்கள் சிரித்துவிட்டு செல்கின்றனர்.